ஊமை வெயில்

Tuesday, December 16, 2008

உங்களோடு சேர்ந்து இன்று மட்டும் என்றாலும் துயில் கொள்ள ஆசை!!

எங்கோ தூரத்தில்
கட்டிடங்களில் கசியும்
மின் ஒளி.
இன்னும் லேசாகக் கேட்கும்
வாகன இரைச்சல்.
தவிர
எங்கும் அமைதியான இருள்.

முகத்தை மெல்ல வருடும்
மெல்லிய குளிர் காற்று.

உங்களுக்கு நன்றி.

நிறையும் அமைதி என்னுள்
உங்களுடன் இருப்பதனால்.

நீங்கள் நல்லவர்கள்.
முழுதாய் நம்புகிறேன்.
நடித்துச் சிரித்து
நெளிந்து குழைந்து
நம்பவைத்து ஏமாற்றும்
குணம் இல்லை உங்களுக்கு.
உங்களால் எனக்கு
ஏமாற்றம் கிடையாது.

அடக்கமானவர்கள் நீங்கள்.
பதிலுக்குப் பேசாததால் அல்ல.
ஆழத்தால் நிறைந்து
அடக்கமானவர் என்பதனால்.

எனக்கு நீங்கள்
தொல்லை தருவதில்லை.
மூச்சுச் சத்தத்தால் கூட.

என்னோடு போட்டியிடா
உங்கள் பெருந்தன்மை
என்னுள் மகிழ்ச்சி தரும்.

உங்களோடு சேர்ந்து
இன்று மட்டும் என்றாலும்
துயில் கொள்ள ஆசை!!
நிரந்தரமாய்...........?
இது பேராசை.

எனக்குப் பொறாமை
உங்களுக்குள் உள்ள
ஒற்றுமையைப் பார்த்து.

இன்றைய பகலில்
உங்களுக்குச் சூட்டப்பட்ட
பூக்களின் வாசனையும்
திராவகங்களின் வாசனையும்
என்னைச் சூழ்ந்த காற்றுள்
இன்னும் நிறைந்து
சுகமாய்...

இடுகுழி மரத்தினின்று
மயானக் குருவிகள்
அலரிக் கலைகிறது.
மயானக் காவலன் வருகிறான்

அவன் என்னைத் உங்களுடன்
இம் மயானத்தில்
தூங்க விடமாட்டான்

அவன் மனிதன்.
நவீனத்துவ வரைபிலக்கண
எல்லைகளுக்குள்ளான மனிதன்.

(2004)

Monday, December 08, 2008

சிவப்பு விளக்குப் பகுதி!

நெருப்பின்
ஊழி நடனமிட்டெரியும்
நெத்தி நரம்புகள்

அழகிய இரவு - தெருவின்
சிவப்பு விளக்குப் பகுதி
சிறு பொழுது தாமதிக்கும்
என் வாகனம்

இருக்கைச் சாளரத்தினூடு
கை நீட்டிக் குளிர் விரலால்
நெற்றி வருடித் தலைகோதும்
மெல்லிளம் காற்று

குளிர் என்று சொல்லி
யன்னல்சாத்த மனம் இல்லை
என் முகம் வருடித் தலைகோத
இக்காற்றும் இல்லை என்றால்……..?

இப்போ பச்சை விளக்கு
பின்னால் உறுமும் வாகனங்கள்
தவிர்க்கமுடியா நகர்வுக்காய்
அழுத்தும் என் கால்கள்.
(2004)

Tuesday, November 16, 2004

under constraction

Under Constraction